Friday, February 19, 2010

கொடுங்கோன்மை சமூகத்தில் வரதட்சணைக் கொடுமை! -V.ROHINI

'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!'என்று பாடினான் புரட்சிக்கவி பாரதி. அவர் பாடி ஆயிற்று ஆண்டுகள் பல! ஆனால் இந்தியப்பெண்கள் இன்றளவும் வெறும் கூழுக்கும். சோற்றுக்கும், நகைக்கும், நட்டுக்கும், சீருக்கும், சிறப்புக்கும், கொடுமைப்படுத்தப்படும் சங்கதிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இத்தகைய கொடுமையின் உச்ச கட்டத்தில் கணவனே மனைவியை மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொல்லுதல், மாமியாரே மருமகளை அடித்துச் சாகடித்தல், மாமனாரும், கொழுந்தனும் தன் வீட்டு மருமகளைச் சித்திரவதை செய்து நாசக் காடாக்குதல் போன்று பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வது அன்றாடச் செய்திகளாய் நாளிதழ்களில் வருகின்றன.
'பெண்ணிங்கு வாழ்ந்து ஆவதென்ன?பெருங் கொடுங் கோலர்கள் மத்தியிலே மாய்ந்தென்ன வீழ்ந்தென்ன?என்று ஓங்காரக் குரல் எடுத்து அழ வேண்டும் போல் இருக்கிறது.
இச்சமுதாயத்தில் பெண் கொடுமை என்பது வரதட்சணை வடிவில் மட்டும் வந்ததல்ல! பால்ய திருமணம், உடன் கட்டை ஏறுதல், பலதாரமணம், பொட்டழித்து பூவழித்து விதவைக் கோலம் ஆக்குதல், பெண் சிசுக்கொலை என்று எத்தனை எத்தனை கொடுமைகள்? அதன் உச்ச கட்ட நவீனக் கொடுமைதான் வரதட்சணை. இதனை தடுக்க சட்டங்களும் உண்டு சம்பிரதாயங்களும் உண்டு, மனித நேயக்கோட்பாடுகளும் உண்டு.
'ஆயிரம் இருந்தென்ன கொடுமைகள்தான் ஓயவில்லை'
ஒரு காலத்தில் பெண் என்பவள் ஆண்களுக்கான ஆடுகளத்தில் போகப் பொருளுக்கான முழு அம்சமாக இருந்தாள். இப்போதும் ஏறத்தாழ அப்படித்தான் இருக்கிறாள். முன்பு ஓர் அரசன் ஒரு பெண்ணை மட்டும் அல்ல, நூறு பெண்களைக் கூட மணப்பான். அவர்களை அந்தப்புரங்களில் 'அம்போ என்று விட்டு விடுவான்.
எதிரிநாட்டு அரசன் நாட்டை நோக்கி படையெடுக்கும் போது, படைகளை துவம்சிப்பதுடன், அரண்மனைகளை சூறையாடுவதுடன் ஆநிரைகளையும், பான், பொருள், ஆபரணம், வைரம் வைடூரியங்களையும், நவரத்தினங்களையும், கொள்ளையடிப்பதுடன் முழு முதலாவதாக அந்தப்புரப்பெண்களை சூறையாடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் பின் விளைவு! எதிரி நாட்டு அரசன் வரும் முன்பு அரண்மனைக்குள் உட்புகும் முன்பே அந்தப்புரத்தில் பெரும் தீ மூட்டி அத்தனை பெண்களும் தீக்கிரையாகுவது நம் நாட்டின் சாபக்கேடாயிருந்தது.
அரசன் வம்சாவழியில் இப்படியென்றால் குடிமக்களின் வழியும் அவ்வழியே இருந்ததில் ஆச்சர்யம் என்ன? இதில் அந்தப்புரம் இருக்காது. ஆனால் பலதாரங்களை மணந்து கொள்வான். தாயானாலும், கட்டிய மனைவியானாலும், மகளானாலும், அவள் ஆணைச் சார்ந்தே பிழைக்க வேண்டும்.
இச்சமூகத்தில் ஆண்தான் எல்லாம் கணவன் இறந்தால், மனைவி பொட்டழித்து, பூவழித்து, கணவனின் எரியும் சிதையிலேயே உடன் கட்டை ஏற வேண்டும். ஆங்கிலேய பிரபுக்களின் ஆதிக்கம் எழுந்தது. மன்னராட்சிகள் படிப்படியாய் ஒழிந்தன. அந்நியரிடம் நாட்டை மீட்கும் முகமாக சுதந்திரப் போராட்டங்களும் எழுந்தன.
பால கங்காதர திலகர் முதற்கொண்டு வங்கச் சிங்கம் லாலா லஜபதிராய், ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, வ.உ.சி, பாரதியார் உள்ளிட்ட பல தலைவர்கள் எழுந்தனர் முழங்கினர். நாடெங்கும் சுதந்திர வேட்கை தவழ்ந்த வேலையில் பெண்களுக்காகவும் ஒரு குரல் கீச்சிட்டது. அது பாலகங்காதர திலகர்தான். 'கைம்பெண் முறை ஒழிய வேண்டும், உடன்கட்டை ஏறும் வழக்கம் அழித்தொழிக்கப்பட வேண்டும், இல்லையெனில் அதில் நானும் தீக்குளியல் நடத்துவேன்' என்று ஓங்காரக்குரலெடுத்து முழங்கினார் அவர். இதில் வடநாடு கதி கலங்கியது. முழங்கியது சாதாரணத்தலைவரா? இந்தியத் தேசத்து சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கும் தலைவர் அல்லவா? அவரின் அந்த கர்ண கடூரக் குரலால் நாடேஅவர் பக்கம் சாய்ந்தது. உடன்கட்டை தடைச்சட்டம் இயற்றப்பட்டது. அதனால் அவ்வழக்கம் படிப்படியாய் ஒழிந்தது.
'அப்பாடா! பெண் கொடுமை ஒழிந்ததடா' என்று நெஞ்சு நிமிர்ந்த வேளையில் பெண்களுக்கு மற்ற கொடுமைகள் அப்படியே இருந்தன. கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண் சீர், சிறப்புகளுடன் கட்டு கட்டாய்ப் பணமும் கொண்டு வர வேண்டும். எனவே பெண்களுக்கான கொடுமைகள் படிப்படியாய் நீக்கப்பட சட்டத் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டது.
மகளிர் நீதி மன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் 90 விழுக்காடு ஆண் மகனால் வரதட்சணைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் வழக்குகளே! மகளிர் காவல் நிலையங்களில் அன்றாடம் பதிவாகும் வழக்குகளில் பெரும்பாலானவை வரதட்சணைக் கொடுமை புகார்களே! 'அப்பா வீட்டில் டூவீலர் வாங்கி வரச்சொல்லி தொந்தரவு செய்தான் கணவன்', 'உன் அம்மா இந்த வயசுல நக போட்டுட்டு மேனா மினிக்கிட்டு இருக்காளே! அவளுக்கு எதற்கு நகை, போயி பத்து பவுனு வாங்கிட்டு வா, இல்ல அதோடு ஒழிஞ்சுடு' என்று விரட்டியடித்த மாமியார், 'உங்கப்பா சொத்து பூராவும் எம்புள்ள பேருக்கு மாத்தி எழுதச்சொல்லு! விரட்டும் மாமனார். இப்படி எத்தனை புகார்கள், காவல் நிலையப்படிக்கட்டுகளை மிதிக்கின்றன என்பதைக் கணக்கிட முடியாது.
'கருவிலேயே பெண் சிசுவைக் கொன்றால் 2 வருடம். தொப்புள் கொடி அறுக்காமலே பிள்ளையைக் கொன்றால் 5 வருடம் கடுங்காவல்!' என்றெல்லாம் சட்டங்கள் இருக்கின்றன. மருத்துவ மையங்களில் கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் இருக்கும் கரு ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து கண்டு பிடித்து முன் கூட்டியே சொல்வது சட்ட விரோதம் என்று தடை செய்திருக்கிறது அரசு அத்தோடு மட்டுமா?
ஒரு பெண் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறாக இறக்க நேரிட்டால் அதை சந்தேக மரணம் என்றே கணக்கில் கொள்கிறது சட்டம். பெண்ணின் பெற்றோர் 'ம்'...என்று ஒரு வார்த்தை அவள் கணவனுக்கு எதிராகச் சொன்னால் போதும். சட்டம் அவனை நெருப்பாகப் பிடித்துக் கொள்கிறது. அவன் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கடுங்காவல் சிறை தண்டனை கொடுத்து தீர்ப்பளிக்கின்றன நீதி மன்றங்கள்.
இந்தியப் பண்பாடு, மனுதர்ம சாஸ்திரம் என்று காலங்காலமாய் ஆண் வர்க்கம் போதித்து வந்த போதனைகளே, அவளை அடிமைப்படுத்தி வைத்துள்ளன.
'தைத் தகர்த்தெறிந்தால் சமூகப் பண்பாடே காணாமல் போய்விடும். கலாச்சாரமே சீர்குலைந்து போய்விடும்!' என ஓங்கார குரலெடுத்து அலறுகிறது ஆணாதிக்கம்.
ஒரு கொடுமை ஒழிந்தால் தானே அதிலிருந்து தோன்றும் உதிர் கொடுமை அகலும்? வரதட்சணைக் கொடுமை ஒழிந்தால் பெண் கொடுமை ஒழியும். பெண் பெருமைகள் அனைத்தும் போற்றத் தக்கனவாகும். பெண் கொடுமை ஒழிந்தால் சிசுக்கொலைகள் தகர்ந்திடும். இவையெல்லாம் தகர்ந்தால் இந்தியப்பண்பாடு தரணியில் சிறக்கும். இந்தியர் மாண்பு உலகெங்கும் ஓங்கும்! இதை சிந்திப்பதும், செயல்படுத்துவதும் இன்றைய இளைஞர்களின் கையில்தான் இருக்கின்றன. ஏனெனில், நாளைய உலகை ஆளப்போகிறவர்கள் அவர்கள் தானே! அதனையடுத்து கொடுங்கோன்மை சமூகத்தில் அடங்காப்பிடாரித்தனம் செய்யும் வரதட்சணைக்கொடுமை அறவே ஒழியட்டும்.

No comments:

Post a Comment