Friday, February 19, 2010

பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியதா தீக்கோழி? -V.ROHINI

பறப்பதாலேயே பறவை என்று பெயர் வந்தது. ஆனால் பறக்காத பறவை இனங்களும் உலகத்தில் உண்டு. ஏறத்தாழ 40 வகையான பறக்காத பறவைகள் உள்ளதாக பறவையியலாளர்கள் கூறுகின்றனர். இதில் நெருப்புக்கோழி அல்லது தீக்கோழி, ஈமு. கிவி, பென்குயின் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் மிகப்பெரிய பறவை தீக்கோழியாகும்.
பொதுவாக பறக்காத பறவையினங்கள் பறக்கும் மூதாதையரில் இருந்து தோன்றியவையாகும். மூதாதை பறவைகள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து உணவு தேடி நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருந்திருக்காது. அதனால் அவை அதிக தூரம் பறக்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது. எதிரி விலங்குகள் அதிகம் இல்லாத பகுதியில் அவை வசித்திருக்கக் கூடும். ஆபத்துகள் இல்லாததால் அவை தற்காத்துக் கொள்வதற்காகக் கூட பறக்க வேண்டி இருந்திருக்காது. இவ்வாறு பறப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்ததால் அவை இறக்கைகள் இருந்தும், பறப்பதற்கான தன்மை இருந்தும் பறக்காமல் இருந்துள்ளன. காலப்போக்கில் இப்பண்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டு பறக்கும் தன்மையை ஏறக்குறைய இப்பறவைகள் இழந்தே விட்டன.
ஆனால் தீக்கோழியைப் பொறுத்தவரை கதையே வேறு. மேற்கண்டவையே இப்பறவையினம் பறக்காததற்கும் காரணமாக இருக்கலாம். அத்துடன் வேறொன்றும் சேர்ந்துள்ளது. தீக்கோழி பறவைகளிலேயே மிகவும் வலுவானது. அதன் கால் நகங்கள் எதிரிகளைக் குத்திக் கிழிக்க வல்லவை. எனவே எதிரிகளைப் பற்றிய பயமில்லாத காரணத்தாலும் அவை பறக்காமல் இருந்திருக்கலாம்.
'தீக்கோழி' பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றிய இனம். ஆனால் தீக்கோழி தன்னைக் கொன்று உண்ணும் உயிர்களற்ற பிரதேசங்களில் வாழ்ந்தமையாலோ என்னவோ தனது பறக்கும் ஆற்றலை இழந்து விட்டது.
இப்பறவை 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது. குறைந்தது அணிக்கு 65 கிமீ வேகத்தில் ஓடக் கூடியது. இந்த தீக்கோழிகள் பார்ப்பதற்கு கங்காரு வடிவத்தை போன்று இருக்கும். நீண்ட கழுத்தையும். கால்களையும் பெற்றிருக்கும் தீக்கோழிகள் இறகு. தோல் மற்றும் இறைச்சிக்காக பண்ணைகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் அவற்றின் இறகுகள் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தீக்கோழிகள் அடைகாக்கிறபோது முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன.முட்டைகளை பகல் நேரத்தில் பெண் தீக்கோழியும், இரவு நேரத்தில் ஆண் தீக்கோழியும் அடைகாக்கின்றன. சாதாரண கோழிகளில் பெண் கோழிதான் எப்போதும் அடைகாக்கும். ஆனால் இந்த தீக்கோழிகளில் ஆண் கோழியும் அடை காக்கின்றது என்பது உண்மையிலேயே வியப்பானதுதான் அல்லவா? ஏதோ அவற்றிற்காவது இந்த சமத்துவ உணர்வு இருக்கிறதே!
பறவை முட்டைகளில் மிகப்பெரியது தீக்கோழி.

No comments:

Post a Comment