Friday, February 19, 2010

"வயிற்றுக்குச் சோறு" -V.ROHINI

அம்மா ஒரு முழம் பூவாவது வாங்குங்கம்மா! காலையிலயிருந்து எதுவுமே போணியாகலே.. வாங்கீட்டு போங்கம்மா..!"
போகிற வருகிற ஜனங்களிடம் எவ்வளவோ தூரம் கெஞ்சிப் பார்த்து விட்டாள் காமாட்சி. ஆனால் எவரும் அதற்கு இணங்குவதாகத் தெரியவில்லை. இவளுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. தொண்டைத் தண்ணி தான் வற்றிப்போது.
"நீயே ஒரு அமங்கலி! உங்கையால வாங்கி பூவச்சா என் குடும்பம் உருப்பட்டாற் போலத்தான்!" அனலாக தகித்த வார்த்தை. 'ஒரு கால் ஊனமானவள். பாவம் எங்கே போய் ஓடியாடி வேலை செய்வாள்?' என்று பரிதாபப்பட்டு போனமாதம் வரை நம்மிடம் பூ வாங்கின மனுசங்க கூட எப்படி மாறிப் போனார்கள்?
வெறுப்பு மேலிடத் தன்னையே பார்த்துக் கொண்டாள் காமாட்சி. போலியோவால் பாதித்து சூம்பிப் போன கால்களை விட அவள் உடுத்தியிருந்த வெள்ளைச்சேலை பெரிய ஊனமாகப்பட்டது. பூச்சுடாத கூந்தல், குங்குமமிடாத நெற்றி. எப்படியெல்லாம் பாடாய் படுத்துகிறது. கணவன் இல்லாதது அவ்வளவு பெரிய ஊனமா?
நன்றாக ஓடியாடி கட்டிட வேலை செய்து வந்த மனுஷன் ஒரு நாள் அப்படியரு நோயில் விழுவான் என்று கனவா கண்டோம்?
சிக்குன் குனியாவாம். முதலில் அவனுக்கு வந்து முடக்கிப் போட்டது. அடுத்ததாக ஐந்து வயதுப்புள்ளை. அதற்கடுத்ததாக இவள். ஒரு வாரக்காய்ச்சல். தர்மாஸ்பத்திரியில் ஊசி, மருந்து போட்டதில் அவளால் முதலில் எழுந்து உட்கார மட்டுமே முடிந்தது. பாடுபட தெம்பில்லை. பிறகு தான் இவர்களும் படுக்கையில் விழுந்தார்கள். எப்போதும் வீட்டு வாசலில் பூக்கட்டி விற்கும் காமாட்சியின் தொழிலை உட்கார்ந்து கொண்டே புருஷனை செய்ய வைக்கலாம் என்று பார்த்தால், மார்க்கெட்டில் 'பூ' வாங்கி வரக் கூட அவருக்கு தெம்பில்லை. அதை விட 'பூ' வாங்க பணமுமில்லை.அதையும் மீறி பசி. 'ரொம்ப பசிக்குது. வயிறு பாடாப்படுத்துத காமாட்சி. ஏதாவது செய்யேன்!'
பிள்ளை ஏற்கனவே சுருண்டிருந்தான். சேகரித்து வைத்திருந்த பணமும் போனவாரம் தர்மாஸ்பத்திரிக்கு அலைந்ததில் காணாமல் போய் விட்டது.
தீராத மூட்டு வலியிலும் எழுந்து அக்கம் பக்கம் தவழ்ந்து கொண்டே உதவி கேட்டுப் பார்த்தாள். 'ஒரு வாய் சோறாவது போடுங்கம்மா!' என்று ஒரு கிண்ணத்தை நீட்டியதில் மூன்றாவது வீட்டில் கொஞ்சமாவது சோறு கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு வந்த போது, படுத்திருந்த புருஷனின் மீது 'ஈ' மொய்த்துக்கொண்டிருந்தது.
அதைப் பார்த்து. இவள் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர்.
ஒரு குவளை சாதத்திற்கு மூஞ்சியை சுளித்தவர்கள் கூட. அட பாவமே செத்துட்டானே!' என்று சொல்லி ஆளாளுக்கு அடக்கம் செய்ய பத்து, இருபது கொடுத்து உதவி செய்தனர்.
அதன் பிறகு இவளும், இவள் பிள்ளையும் அந்த நோயிலிருந்து மீண்டதே மிகப்பெரிய விஷயம்தான். அன்றாடம் வரும் கந்துக்காரனிடம் நூறு ரூபாய் பெற்று 'பூ' வாங்கி தொடுத்து வழக்கம் போல் கடை விரித்தும் வைத்தாள். ஆனால் ஒரு ஆள் கூட 'பூ' வாங்கவில்லை. கேட்டால் 'அமங்கலி' என்பார்கள். எங்கையால வாங்கினா விளங்காதாம்!
'புருஷனைப் போல் பட்டினியாலேயே செத்துப் போயிருக்கலாம்!' என்று தோன்றியது. கண்ணீன் ஓரத்தில் நீர் தேங்கி நிற்க, "திடீரென அம்மா...அம்மா... எனக்கு வயிறு பசிக்குதுமா"...குரல் கேட்டு திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தாள் காமாட்சி. அஞ்சு வயசு பிஞ்சு மகனின் குரல் வாசலில் தொடுத்து வைத்திருந்த 'பூ' முற்றிலும் வாடியிருந்தது.
குடிசைக்குள் தவழ்ந்து சென்றாள். உள்ளே இருந்த குண்டாவை எடுத்தாள். புருஷனுக்கு கடைசியாய் சோறு வாங்கப்போன அதே குண்டா. அதே மூன்றாவது வீடு. இவள் குரலைக் கேட்டதும் அந்த வீட்டுக்காரி எரிந்து விழுந்தாள். சோறும் இல் ஒன்னும் இல்ல..போ..போ என்று அடிக்காத குறையாக விரட்டி அடித்தாள்
அடுத்த வீடு. அதற்கடுத்த வீடு. எல்லாக்கவுகளும் அடைக்கப்பட்டன. அதற்கு மேல் தவழ உடலில் சக்தியில்லை. எந்தப் பாதையும் தெரியவில்லை. குத்து மதிப்பாகத் தன் குடிசையை நோக்கி தவழ்ந்தாள்.
அங்கே 'வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கே வாழும் மனிதருக்கெல்லாம்!' என்று அவளது மகன் பிஞ்சுக் குரலில் பாடம் படித்துக் கொண்டிருந்தான். அவளின் கண்களில் மேலும் இருட்டுக் கட்டியது.
தன்னை முடக்கியது எது? பிறப்போடு வந்த உடலின் ஊனமா அல்லது புருஷன் செத்ததுக்காக தன்னைப் பட்டினி போடும் சமூகமா என்றெல்லாம் யோசிப்பதற்குக்கூட தெம்பு கூட இல்லாதவளாக அவளது கண்களைக் கவ்விய இருட்டை பொங்கிய கண்ணீர் துடைக்க முயன்று கொண்டிருந்தது.

No comments:

Post a Comment