Got My Cursor @ 123Cursors.com

Friday, October 28, 2011

'புகழே இகழ்வாய்...!'




"யேய் தப்பித்தவறிக்கூட கிளாஸ்ல அந்தக் கதையை எழுதினது என் அப்பாதான்னு நீ சொல்லிடக்கூடாது. எனக்கு கையில அடிச்சு சத்தியம் பண்ணு!"

கருப்பியிடம் கெஞ்சாத குறையாக கைநீட்டி 'ப்ராமிஸ்' கேட்டாள் அருணி. 'ஒரு பெண்ணுக்கு தன் அப்பா எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வது எவ்வளவு பெரிய விஷயம்? அதுவும் தான் படிக்கும் கல்லூரி வகுப்பில் தன் தந்தையின் கதையே பாடமாக வரும்போது அதை பேராசிரியர், சக மாணவர்கள் மாணவிகளிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதை விட்டுவிட்டு இப்படியிருக்கிறாளே?' என்று கருப்பி ஆச்சர்யமாக பார்த்தாள்.

ஆகாயத்தின் திரைச்சீலைக்குள் நட்சத்திரக் கூட்டங்கள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. கிழக்கு வானில் முழு நிலா மஞ்சள் வண்ணத்தில் மேகமூட்டத்திலிருந்து எழுந்து கொண்டிருந்தது. அருணி, கருப்பி இருவருமே அந்த கல்லூரி விடுதியின் முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த மணல்மேட்டின் சரிவில் உட்கார்ந்திருந்தனர். 'குபுக்'கென்று கண்ணில் நீர் கொப்பளித்தது அருணிக்கு. கருப்பி பதறிப்போனாள். "ச்சீ அசடு. இதுக்குப்போய் யாராவது அழுவாங்களா? கண்ணைத்துடை. உன்னை மீறி நான் என்ன செய்திருக்கேன். இதை மட்டும் செய்யறதுக்கு?" என்று திருப்பிக்கேட்டு அவள் கையை பிடித்துக் கொண்டாள்.

அருணி, கருப்பி பள்ளிப் பருவத்திலிருந்தே இணை பிரியாத தோழிகள். இலக்கிய பற்று காரணமாக அருணி தமிழ் பாடத்தையே தேர்வு செய்தாள். இதை பார்த்த கருப்பியும் அதே கல்லூரியில் அதே கோர்ஸில் சேர்ந்தாள். கருப்பிக்கு அருணி ஏதாவது திங்ஸ் வாங்குனா கூட, அதை பாத்துட்டு போய் அதைப்போலவே வாங்கி வந்து அவ கிட்ட காட்டி சந்தோஷப்படறது அவளது பழக்கம். 'கல்லூரி முதல் நாளில் என்ன டிரஸ் என்ன கலர்ல போடுவே?' என்று கேட்டுவிட்டு, அந்த நாளில் அவளைப் போலவே புது டிரஸ் வாங்கி போட்டுகிட்டு வந்தவள் அவள்.

அப்படிப்பட்டவள் அன்றைய தினம் நூலகத்திற்குள் சென்றவள் ஏதோவொரு புத்தகத்தை தூக்கிக்கொண்டு யுரேகா சொல்லாத குறையாக இவளிடம் ஓடி வந்தாள். அவள் கையில் இருந்தது 'மேற்கத்தி சாரல்-சிறுகதை தொகுப்பு'. காலையில்தான் தமிழ் பேராசிரியர் சுந்தரம் ஐயா இந்த புத்தகத்தை குறிப்பிட்டு அடுத்தநாள் பாடத்திற்கு படித்துவிட்டு வாங்கி வரச் சொல்லியிருந்தார்.

அப்புத்தகத்தை தேடி எடுத்துவிட்ட சந்தோஷத்தில்தான் கருப்பி வருகிறாள் என்றுதான் முதலில் நினைத்தாள் அருணி. அவள் அப்படி ஓடி வந்ததற்கு காரணமே வேறு. வந்தவள் வேக, வேகமாக புத்தகத்தை புரட்டினாள். முதலில் இருந்த கதையை காண்பித்தாள். 'ஒரு கழுதையும், சில பன்றிகளும்!' தலைப்பில் வெளியாகியிருந்த சிறுகதைக்கு கீழே சு.சாரதி என்ற தனது அப்பாவின் பெயர் இருக்க முகமெல்லாம் பரவசமானாள் அருணி.

"யேய் இது உங்க அப்பா எழுதிய கதைதானே? சொல்லவேயில்லை. இதுவே நம்ம கல்லூரியில் பாடமா இருக்குன்னா உனக்கு யோகந்தாண்டி புள்ளே?" என்றவள், "உனக்கு இனி பிரச்சனையே இல்ல போ....உன் அப்பா கிட்டயே கதையை சுருக்கமாக கேட்டுட்டு வந்து வகுப்புல சொல்லிடுவ...கதைய சொல்லி முடிச்சதும் இந்த கதைய என் அப்பாதான் எழுதுனதுன்னு சொன்னதுமே உன் மேல ஒரு தனிப்பட்ட மரியாதையே நம்ம பசங்க முன்னாடி வந்துடும். சுந்தரம் ஐயா கிட்ட சொல்லவே வேணாம்...!"என்று அவள் சொல்லச் சொல்ல உண்மையிலேயே பூரித்துப் போனாள் அருணி.

அப்பா முன்னணி பத்திரிக்கைகளில் எல்லாம் கதை எழுதினவர். அவர் எழுதி வெளியிட்ட சில நூல்கள் நூலகங்களிலும் இடம் பெற்றிருக்கிறது. விருதுகள் வாங்கியிருக்கிறது. ஆனால் அவர் எழுதிய சிறுகதை ஒன்றே தான் படிக்கும் கல்லூரியில் பாடமாக இருக்கிறது என்பது தனக்கே தெரியவில்லையே என்று ஆச்சர்யப்பட்டாள். தவிர அப்பாவின் கதைகள் எத்தனையோ படித்து பழக்கப்பட்ட தன் பார்வையில் இந்த கதை மட்டும் எப்படி படாமல் போனது? என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டாள். கொஞ்சம் ஆற அமர அந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். கதை ஆரம்பத்தில் புரியாத மாதிரி இருந்தது, இருந்தும் 'அப்பா கதையாச்சே! விட முடியுமா?' தொடர்ந்து படித்தாள்.

'சாதி'யை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கதையில் பன்றி வளர்க்கும் ஒரு கீழ்சாதிக்காரன் ஒருவன் வருகிறான். கழுதையை வைத்து ஜீவனம் செய்யும் சலவைத் தொழிலாளி ஒருவன் வருகிறான். இருவரும் முறையே பன்றி, கழுதை கழிவுகளை எடுத்து விவசாயிகளுக்கு விற்கிறார்கள். இதில் இருவருக்கும் போட்டி. சண்டை. இறுதியில் கழுதை கொல்லப்படுகிறது. நல்ல கரு. மிக எளிமையான வட்டார வழக்கு. கீழ்த்தட்டு மக்கள் பேசும் கொச்சையான வசனங்கள் உள்ளடங்கிய கதை. அதைப்படிக்க படிக்க மனம் துணுக்குற்றது அருணிக்கு.

'இது அப்பா நம் சொந்த சாதியை மையமாக வைத்து எழுதிய கதையாச்சே. இந்த கதை இடம்பெற்ற கதைத் தொகுப்பைத்தான் அப்பா வெளியிட்டபோது பல பேச்சாளர்கள் தன் சாதியை பற்றி ரொம்பவும் கொச்சைபடுத்தி பேசியது தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதாக அப்பா, அம்மாவிடம் சொன்னதாக நியாபகம். அதனால் அந்த தொகுப்பையே மற்றவர்களிடம் கொடுக்காமலே இருந்து பரணில் போட்டுவிட்டார். அப்பாவுக்கே இப்படி மன உளைச்சலை ஏற்படுத்திய கதை தன் கல்லூரியிலேயே பாடமாக தனக்கே வந்து வாய்த்திருக்கிறதே? இது என்ன சோதனை? இதை வகுப்பில் மற்ற மாணவர்கள் படித்தால் இது நம்ம அப்பா கதை என்று தெரிந்தால் ஓ.. நீ அந்த சாதியா? என்று பார்வையாலேயே துளைத்தெடுத்து விடுவார்களே?

இந்த நேரத்தில் அவளுக்கு கல்லூரியில் சேர்ந்த வேளையில் ஸ்காலர்ஷிப்புக்காக விண்ணப்பங்களை நிரப்பச் சொல்லி வகுப்பு ஆசிரியர் படிவங்களை கொடுத்ததும், மற்ற மாணவர்களுக்கு தெரியாமல் அதில் தன் ஜாதியை குறிப்பிட தவித்த, தவிப்பும் நினைவுக்கு வந்தது. அந்த விண்ணப்பத்தை கொண்டு வந்து தந்ததும் சுந்தரம் ஐயாதான். அவர் வகுப்புக்கு வந்த போதே அவர் கையில் வைத்திருந்த இரண்டு வண்ணங்களில் விண்ணப்பங்கள் வைத்திருந்தார்.

அதில் ஒரு பகுதி விண்ணப்பங்களை எடுத்து, எஸ்.ஸி பையன் ஒருத்தனை வரச்சொன்னார். அவனிடம், 'யாரெல்லாம் 'எஸ்.ஸி'னு கேட்டு இந்த ஃபாமை கொடு!' என்று கொடுத்தார். இதே போல் இன்னொரு பகுதி விண்ணப்பங்களை எடுத்து இன்னொரு பையனை அழைத்து, 'பி.ஸி, எம்.பி.ஸி யாருனு கேட்டு இந்த ஃபாம்மை கொடு!' என்று சொல்லி கொடுத்தார்.

கொடுத்து முடித்ததும், "பசங்களா ஃபாம்ம ஃபில் பண்ணி கொடுங்க, நாளைக்கு வரும் போது மறக்காம பாஸ்போட் ஸைஸ்ல 2 போட்டோ கொண்டுட்டு வந்து கொடுத்துடுங்க, இப்ப இத எழுதிக்கொடுங்க என்று சொன்னதும் எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தனர். மாஸ்டர் மட்டும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முன்பக்கமாக காலை அகல விரித்தவாறு, கையை தலைக்கு பின்னால் கொண்டு போய் நாற்காலியில் கை படிந்தவாறு மடக்கி வைத்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

"அருணி, சுந்தரம் மாஸ்டர் உட்கார்ந்திருக்கற அழக பாரு கொஞ்ச, ஏய்! பாரு புள்ளெ...ய்" இப்படியே ரொம்ப நேரமட்டு உட்கார்ந்திட்டே இருந்தாரு, அவரு பேண்ட் இன்னைக்கு 'டர்'ன்னு கிழியறது நிச்சயம் புள்ளெ!' ன்னு சிரித்துக் கொண்டே கருப்பி சொன்னாலும் அவள் கண்கள் அருணி எழுதும் விண்ணப்பத்தின் மீதே இருந்தன.

அருணிக்கு அவள் பார்ப்பதற்கான அர்த்தம் புரியாமல் இல்லை. கருப்பி ஏதோ சந்தேகம் கேட்டுக்கொண்டே, அவள் எழுதுவதையும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்கு மட்டும் இவள் சாதி தெரியும் என்றாலும், அதை அவள் கையாலேயே எழுதுவதை பார்ப்பதில் ஏதோ ஒரு ஆனந்தம் இருக்கிறது போலும். அவளைப் போலவே மேலும் சில மாணவிகளும் வம்படியாக அவள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதை கவனிக்கவே எத்தனித்தார்கள். அருணிக்கு எழுதுவதில் தயக்கம்.

'வெளியே சொல்லவே கூசுகிற ஜாதி. எப்படி நம்ம சாதி பெயரை எழுதுவது?'

அவளை மேலும் எரிச்சல் ஊட்டும் விதமாக அடுத்த டெஸ்கில் இருந்த ஒருத்தி இன்னொருத்தியை நோண்டினாள்.

"'ஏய்.. நீ எழுதி முடிச்சுட்டயா?"

"ம்...!".

"இங்க கொடு பாக்கலாம்"

விண்ணப்பத்தை வாங்கியவள் ஜாதிக்கான கட்டத்தில் எழுதியிருப்பதை மட்டுமே பார்த்திருப்பாள் போல. 'ஏய் நீங்க கவுண்டரா?' என்று கேட்கிறாள்.பதிலுக்கு கூட காத்திராமல், 'அட நானும்தான்' என்று இவள் பெருமையா அவளிடம் சொல்லுகிறாள். 'உங்களுக்கு சொந்த ஊரு எது?' என்று கேட்டதோடு அவங்க குலம், கோத்திரம் அப்பா, அம்மா பெயர் எல்லாத்தையும் விசாரித்துவிட்டு 'ஏ.. நீ எனக்கு அத்தை முறை. நான் மருமக முறை என்றெல்லாம் அளந்துவிட ஆரம்பித்தாள்.

அருணிக்கு அதைக் கேட்க, கேட்க காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல் இருந்தது. 'நாமும் வெளியில் சொல்லிக்கொள்கிற மாதிரி ஜாதியில் ஏன் பொறக்கவில்லை?' என்று யோசித்தபடியே யாரும் தன்னை கவனிக்காத நேரம் பார்த்து தன் சாதியை அடிக்கோடிட்ட இடத்தில் எழுதி சற்றும் தாமதிக்காமல் சுந்தரம் ஐயாவிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்துவிட்டாள். நல்லவேளை அப்போது யாரும் பார்க்கவில்லை. என்றாலும் அந்த விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு வந்த டெஸ்க்கில் உட்கார்வதற்குள் வியர்த்து விட்டது.





அந்த சம்பவத்திற்கு பிறகு வெளிப்படையாக ஜாதி சொல்ல வேண்டிய நெருக்கடியை அப்பாவின் கதையே ஏற்படுத்தியிருக்கிறது என்றால் இதை என்னவென்று சொல்ல? 'அப்பா எத்தனையோ கதைகள் எழுதி குவிச்சிருக்காரு. அதுல, இதை விட நல்ல கதைகள் எவ்ளோவோ இருக்கு. அதுல ஏதாவது எனக்கு பாடமா வந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்" என்று நினைக்க நினைக்க அருணிக்கு முகம் சுருங்கி, வியர்த்து கருக்க ஆரம்பித்தது.

'அப்பா எதற்காக நம்ம சாதிக்கதையையே கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்? பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே நம்ம சாதி தெரிஞ்ச பசங்க ரொம்ப கொச்சைப்படுத்தி பேசுவாங்க. இங்கேதான் சாதி சொல்லாமல் தப்பிச்சுட்டு இருக்கோம். இந்த ரூபத்துல இது வேறயா?' நினைக்கும்போதே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அது அப்பாவின் மீதான கோபமாகவும் திரும்பியது. சுந்தரம் ஐயா, எல்லோரையும் ஒவ்வொரு கதைய படிச்சுட்டு வரச்சொல்லிருக்கார். நா அப்பா கதையவே சொல்லி கடைசியில் அது எங்க அப்பா எழுதுன கதைன்னு சொன்னா எப்படி இருக்கும்?" என்று அவளுக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள்.

அவள் எதிர்பார்த்த மாதிரியேதான் அடுத்தநாள் வகுப்பிலும் நடந்தது. அருணி, கருப்பி இருவரும் வழக்கம் போல் போய் வகுப்பில் உட்கார்ந்திருந்தனர். சுந்தரம் ஐயா சொன்ன மேற்கத்தி சாரல் சிறுகதை தொகுப்பை பெரும்பாலான மாணவர்கள் வாங்கி வந்திருந்தனர். சிறிது நேரத்தில் சுந்தரம் ஐயா அவரது இருக்கையில் வந்து உட்கார்ந்தார். மாஸ்டர் கோயிலுக்கு போயிட்டு வந்திருப்பது அவரது நெற்றியில் உள்ள பட்டை காண்பித்து விட்டது.

"பசங்களா நான் சொன்ன மாதிரி எல்லோரும் புத்தகம் வாங்கிட்டு வந்திங்களா?" கேட்டார்.

எல்லோரும் புத்தகத்தை கையில் தூக்கி காட்டி, "வாங்கிட்டோம் ஐயா" கோரஸாக சொன்னார்கள்.

"நல்லது. நா சொன்ன மாதிரியே வாங்கிட்டு வந்துட்டீங்க. அதே மாதிரி படிச்சுட்டும் வந்தீங்களா?" யாரிடமும் பதிலிலில்லை..

அதை மட்டும் செய்ய மாட்டீங்களே. சரி.. சரி நானே சில கதைகளின் அடிப்படை விஷயங்களை சொல்றேன். குறிப்பெடுத்துக்குங்க!"எடுத்த எடுப்பிலேயே மாஸ்டர் அப்பா கதையைத்தான் சொன்னார்.

"கதை சொல்றதற்கு முன்னாடி கதைன்னா என்ன? எப்படி ஆரம்பிச்சு, எப்படி தொடுத்து, எப்படி சித்தரிக்கறாங்க, கதையோட பின்னணி என்ன இதெல்லாம் தெரிஞ்சுக்கா வேணாமா பசங்களா?" என்று அதற்கான விளக்கத்தை கொடுத்தார். ஒருவனது வாழ்க்கை அனுபவங்கள் தான் கதையாக சித்தரிக்கப்படுகிறது. ச்சும்மா யார் நெனச்சாலும் கதைய எழுதிட முடியுமா? கண்டிப்பா முடியாது. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதையாக வடிவமைக்கப்படுகிறது. இந்த கதையின் ஆசிரியர் சு.சாரதி இந்த கதைய உருவாக்கியவர் இல்லையா? அவரையே எடுத்துக்குவோம். இவர் எழுதுன இந்த கதைய நான் எழுதனும்ன்னு நெனச்சா முடியுமா? ம்... கண்டிப்பா என்னால முடியாது. அனுபவத்தோட எழுதுன கதை மட்டும் தான் பேசும். சாதியை மையமாக கொண்டு எழுதற ஒவ்வொரு கதையும் அந்த சாதியில் பிறந்த ஒருத்தனால் மட்டும் தான் கதையை நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் எழுத முடியும். ஒரு உயர்சாதிக்காரன்கிட்ட போய் கழுதையைப்பத்தியும், பன்றியின் கழிவுகளை பற்றியும் எழுதச்சொன்ன எழுதுவானா? அப்படியே எழுதறான்னு வெச்சுப்போம், அந்த கதை படிக்கறவங்க மனசுல நிக்குமா?ம் அனுபவத்தோடு எழுதும் கதைகள் மட்டுமே வாழ்க்கையில் பேசும் பசங்களா!"

அப்பாவின் கதையை சுந்தரம் ஐயா புகழ்ந்து சொன்னது புல்லரிக்க வைத்தது. அதுவே அந்த கதை தன் அப்பாவின் கதை என்று சொன்னால் அந்த புகழ்ச்சியின் சாரம் தனக்கு வாய்க்குமா? ஐயா கண்டு கொள்ளாவிட்டாலும் பசங்க எளிய சாதியை வச்சு ஏளனமாகத்தானே பார்ப்பாங்க? எனவே அவளால் சொல்லவும் முடியவில்லை. கருப்பி எங்காவது உளறித் தொளச்சுடுவாளோன்னு பயமாகவும் இருந்தது. 'சொல்லடி, சொல்லடி உங்க அப்பா கதைன்னு நான் சொல்லட்டுமா? என்று அவள் உசுப்பேற்றி பக்கத்தில் உட்கார்ந்து தொடையை கிள்ளியபோது உண்மையிலேயே துடித்துப் போனாள். 'யேய் அப்படி மட்டும் சொன்னே நான் உங்கூட காலத்துக்கும் பேச மாட்டேன்!' என்று சொன்னதும்தான் அடங்கினாள்.

ஹாஸ்டலுக்கு வந்ததும் முதல் வேளையாக கையடிச்சு சத்தியம் சொல்லச் சொல்லி கேட்டாள் அருணி. அவளும் இவள் மனதை அறிந்து சத்தியம் செய்தாள். அருணியின் கண்களில் குபுக்கென்று நீர் பொங்கியது. வானத்தில் நிலா மேகமூட்டத்திலிருந்து விலகி வெட்ட வெளிக்கு வந்திருந்தது.

சிறுகதை- செல்வி வே.ரோகிணி,



அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி-2011 முடிவுகள் 14.08.2011ல் வெளியானது. பிரசுரத்துக்குத் தேர்வான 10 சிறந்த கதைகளில் என் கதையும் (புகழே இகழ்வாய்) ஒன்று. கல்கி இதழுக்கு நான் அனுப்பிய முதல் கதை இது. முதல் முயற்சியிலேயே பிரசுரத்திற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு கல்கி இதழுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Tuesday, July 26, 2011

http://rpsubrabharathimanian.blogspot.com/2008/05/blog-post_1502.html

http://nermai-endrum.blogspot.com/2010/10/100-10_18.html

http://tamilthesiyam.blogspot.com/2009/03/blog-post_9073.html

கா.சு.வேலாயுதன்

http://bsubra.wordpress.com/2007/06/05/

https://groups.google.com/group/panbudan/msg/6a4d27d58ba61511?hl=en

http://meenakam.com/2010/12/08/15593.html

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75862

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78645

http://rpsubrabharathimanian.blogspot.com/2008/05/blog-post_1502.html

அமெரிக்காவின் கழிவு கோவையில்

http://pari.wordpress.com/page/2/

பொழுதுக்கால் மின்னல்

http://nermai-endrum.blogspot.com/2010/08/courtesy-kumudam_24.html

http://thedipaar.com/news/news.php?id=14338

குலம் பல காக்கும் குல தெய்வம்